குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் செப்டெம்பர் 02 இல் ஆரம்பம் - Today First

Application

PHI Selected Name List

Breaking

Monday, August 31, 2020

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் செப்டெம்பர் 02 இல் ஆரம்பம்



கடந்த ஜனவரி மாதம் முதல் அரசினால் வறுமையை ஒழிப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டு முன்னெடுத்து வரும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 2020 செப்டெம்பர் 02ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. 


வறுமை நிலையிலுள்ள 100000 குடும்பங்களுக்கு தொழில் வழங்கும் இவ் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேர்முகப்பரீட்சைகளும் நடாத்தப்பட்ட நிலையில் கடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலின் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. நாட்டில் வறுமை நிலையிலுள்ள அனைத்து இளைஞர் யுவதிகளும் தொழில் வாய்ப்பொன்று கிடைக்கும் எனும் கனவுடன் இதற்கான நேர்முகப்பரீட்சையில் கலந்து கொண்டனர்.


எனினும் நாட்டின் அனைத்து மக்களும் மிகவும் நம்பிக்கையுடன்  எதிர்பார்த்திருந்த தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்துறை அபிவிருத்தி செயலணி மூலம் தற்பொழுது மீண்டும் புத்துயிர் பெறுகின்றது.


இத்தொழில் வாய்ப்பில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 06 மாதத்திற்கு தொடர் பயிற்சியும், மாதமொன்றிற்கு 22500.00 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது. பயிற்சியை முடித்தபின்னர் தாம் பயிற்சி பெற்ற துறையில் தமது நிலையான வதிவிட பிரதேசத்தில் அரச அனுமதி பெற்ற ஆரம்ப கைவினைஞர் அல்லாத சம்பளம் (ரூபா 35000.00) மற்றும் கொடுப்பனவுகளைக் கொண்ட அரசாங்கத்தின் நிலையான பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. 


சிறப்பாகவும், தொடர்ச்சியாகவும் 10 வருடகால சேவையை நிறைவு செய்த பின்னர் அரசாங்கத்தின் ஓய்வூதியமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது எவ்வகையான இலஞ்சமும் வழங்குவது தொழில் வாய்ப்பு நிராகரிக்கப்படுவதற்கு காரணமாக அமையலாம் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Pages